மாவட்ட கிளை நூலகத்தில் உலக புத்தக தினம், நூலக நண்பர்கள் திட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 24 April 2023

மாவட்ட கிளை நூலகத்தில் உலக புத்தக தினம், நூலக நண்பர்கள் திட்டம்.


வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த காந்திநகர் அறிஞர் அண்ணா மாவட்ட கிளை நூலகத்தின் வாசகர் வட்டம் மற்றும் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் சர்வதேச புத்தக தினவிழா மற்றும் நூலக நண்பர்கள் திட்டம், வீதி வாசிப்பு முகாம், வாசிப்போம் நேசிப்போம் இயக்கம் நடைபெற்றது. 

நிகழ்வுக்கு வாசகர் வட்ட துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  முன்னதாக நல்நூலகர் தி.மஞ்சுளா வரவேற்று பேசினார். சென்னை பல்கலைகழக உதவி பேராசிரியர் எஸ்.தியாகராஜன், இல்லம் தேடி கல்வி திட்ட காட்பாடி வட்டார ஒருங்கிணைப்பாளர் வில்வநாதன் தன்னார்வலர்கள் கே மாலதி, தனலட்சுமி, எஸ் துர்கா அலமேலு பார்கவி ஜமுனா மோட்டூர் நடுநிலைப்பள்ளியின் ஆசிரியை அஞ்சலாட்சி மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 

தமிழக அரசின் புதிய திட்டமான நூலக நண்பர்கள் திட்டத்தின் அடையாள அட்டை மற்றும் நூல்கள் கொண்டு செல்ல ஏதுவாக புத்தக பை ஆகியவற்றை வாசகர் வட்ட துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வழங்கி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது. உலக புத்தக தினம் ஏப்.23-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி - பதிப்பாளர் - வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு, பராமரிப்பு, தொகுப்பு, அனைத்து மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இலக்குகளை நோக்கிச் செல்வதன் ஓர் உலகளாவிய இயக்கமாகவே 1996-ம் ஆண்டு ஏப்.23 நாளில் உலக புத்தக தின கொண்டாட்டம் தொடங்கியது.  


உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தநாளும் நினைவுநாளுமான இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தொடங்கிய உலக புத்தக தின கொண்டாட்டம் ஆண்டுதோறும் தொடர்கிறது. எனவே உலக புத்தக தினத்தில் புத்தக வாசிப்பை பரவலாக்கும் முயற்சியை தொடர்வோம். 


இந்த நிகழ்வில் கழிஞ்சூர் மோட்டூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சார்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று நூல்களை வாசித்தனர். அவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad