மின்சார வசதி இல்லாத வீட்டில் படித்து இன்று மின் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஓய்வு பெறும் குடியாத்தம் சிங்க பெண். கிராம மக்கள் வாழ்த்து. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 May 2023

மின்சார வசதி இல்லாத வீட்டில் படித்து இன்று மின் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஓய்வு பெறும் குடியாத்தம் சிங்க பெண். கிராம மக்கள் வாழ்த்து.

குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று பிரபல மத்திய அரசு நிறுவனமான என் எல் சி இன் நிர்வாக இயக்குனராக மே 31 2023 ல் ஓய்வு பெறுகிறார் பெரும்பாடி கிராம நடராஜன் கார்த்திகை.

பெரும்பாடி கிராமத்தில் 1960 வது களில் பீடி சுருட்டும் தொழிலாளி நடராஜன் என்பவருக்கும், பூ விற்கும் தாய் தனலட்சுமிக்கும் பிறந்தவர் கார்த்திகை. தன்னுடைய தொடக்க பள்ளிப்படிப்பை பெரும்பாடி கிராமத்திலுள்ள ஆரம்ப பள்ளியிலும், இடை மற்றும் மேல்நிலை படிப்பை குடியாத்தம் அரசு மகளீர் பள்ளியிலும் படித்தவர், பத்தாம் வகுப்பு படிக்கும் காலங்களில் எல்லாம் குடும்ப சூழலின் காரணமாக பள்ளி நாட்களில் மாலை நேரங்களில் நான்கு கிலோமீட்டர் தூரம் பள்ளியில் இருந்து வீட்டிற்க்கு நடந்து வந்து, உடனடியாக தன்னுடைய தாய் கட்டி வைத்திருக்கும் பூ மாலைகளை விற்பதற்காக குடியாத்தத்திற்கு மீண்டும் நடந்தே சென்று பூக்களை விற்று விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து மின்சாரம் கூட இல்லாத நிலையில் சிம்னி விளக்கு ஒளியிலும் ஒருநாளில் ஏறக்குறைய 16 கிலோமீட்டர்  தூரம் நடந்த களைப்பிலும் படித்தாலும் தன்னுடைய விடா முயற்ச்சியால் உலக புகழ் பெற்ற சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை பெற்றார் நடராஜன் கார்த்திகை. 


பின்னர் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்டத்தை 1985 ஆம் ஆண்டு பெற்ற இவர் படிப்பை முடித்த ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனமான என் எல் சி யில் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்தார்.


கடின உழைப்பாலும், ஆழ்ந்த கடவுள் பக்தியாலும் நேர்மையை மட்டுமே பாதையாக கொண்ட இவர் தன்னுடன் பணியில் சேர்ந்த சக பொறியாளர்களை விட வேகமாக உயர் பதவிகளை பெற்றார். என் எல் சி இன் பவர் ஸ்டேஷன் பிளானிங், பவர் புரடக்க்ஷன் பிளானிங் பணிகளிலும் நிலக்கரி சுரங்க ஒப்பந்த பிரிவு உயர் அதிகாரியாகவும் பல ஆண்டுகளாக பணி செய்து அனுபவம் கொண்டவர்.


இதன் காரணமாக பல்வேறு வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நிறுவனம் தொடர்பான கருத்தரங்குகளில் பங்கு பெறும் வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.  நிறுவனம் தொடர்பான பல்வேறு தேசிய விருதுகள் இவருடைய குழுவுக்கு கிடைத்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு என் எல் சி இன் மிக உயர்ந்த பதவியான நிர்வாக இயக்குனர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.



ஏழ்மையான சூழலில் இருந்து முன்னேறி உயர் பதவியை பெற்ற இவரை பற்றி கிராம மக்கள் சிலர் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்தனர். பொதுவுடைமை சிந்தனை கொண்ட தோழர் ஆறுமுகம் சொன்னது. பள்ளி படிப்பின் போது கார்த்திகை மிக ஆர்வமாக படிப்பார், தாய் தந்தையருக்கு எப்போதும் உதவியாக இருப்பார், பள்ளிக்கு செல்லும் வேளைகளில் தான் அந்த பெண்ணை வெளியே பார்க்க முடியும், எப்பொழுதுமே வீணாக பொழுதை கழித்து நாங்கள் பார்த்ததில்லை, விளையாட்டில் கூட அவருக்கு அவ்வளவு ஆர்வம் கிடையாது. ஆனால் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்று சொன்னார்.


மேலும் டீ கடை ராணியம்மா கூறும்போது, சிறுவயதில் தந்தையுடன் கார்த்திகை எங்களுடைய கடைக்கு சில வேளைகளில் வருவாள். மிகுந்த பணிவுடன் பழகும் இயல்பு கொண்டவள். இவ்வளவு பெரிய உயர் பதவியில் இன்று இருக்கிறார் என்று கேள்வி பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஊருக்கு வரும்போது எங்களை சந்திக்கும் நேரங்களில் எல்லாம் எத்தனையோ நாட்களில் உங்களுடைய கடை இட்டிலி தான் என்னுடைய காலை பசியை போக்கிய சிற்றுண்டி என்று நன்றி மறவாமல் கூறுவார். நேர்மையான பண்பு கொண்ட இவருக்கு பெரிய உயர் பதவிகள் கிடைத்தது பொருத்தம் தான் என்று மகிழ்ச்சியுடன் டீ கடை ராணியம்மா தன்னுடைய நினைவுகளை கூறினார்.



மின்சார வசதி இல்லத வீட்டில் இருந்து படித்தாலும். இன்று பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணி ஓய்வு பெறுவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.. ஆனால் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் தனக்கென ஒரு தனி குடும்பத்தை அமைத்து கொள்ளாமல் ஆன்மீகம் ஒன்றே சிறந்த வாழ்வு என்று வாழ்ந்தாலும் மனதின் ஓரத்தில் சிறு வருத்தம் உள்ளது. இருந்தாலும் எங்களுக்கு எல்லாம் எட்டா கனியாக இருக்கும்  புனித கயிலாய யாத்திரைக்கே எங்கள் வீட்டு பெண் பண்ணிரெண்டு முறைக்கும் மேல் சென்று வந்து இருக்கிறார் என்ற தெய்வீகத்தை நினைத்தால் மகிழ்ச்சி தான் என்று கார்த்திகையின் சொந்தபந்தங்கள் தெரிவித்தனர்.


நமது கிராமத்தை சேர்ந்த ஒருவர் உழைப்பால் உயர்ந்து உயர் பதவி பெற்று ஓய்வுபெறுவதை முன்னிட்டு கிராம மக்கள் இனிப்புகளை பரிமாறிகொண்டு கார்த்திகை க்கு வாழ்த்து தெரிவித்தனர்.


- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad