மத்திய அரசின் பாரத் விகாஸ் சங்கல்ப் யாத்திரை துவக்கம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 December 2023

மத்திய அரசின் பாரத் விகாஸ் சங்கல்ப் யாத்திரை துவக்கம்.


குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுகூர் ஊராட்சியில், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த பாரத் விகாஸ் சங்கல்ப்யாத்திரை சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.

வளர்ச்சியடைந்த பாரதம் நமது லட்சியம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு வாகன யாத்திரை நாடு முழுவதும் செல்கிறது. இதன் ஒரு பகுதியாக இந்த யாத்திரை வாகனம் குடியாத்தம் வந்தது. மேல்முட்டுகூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசு மக்களுக்கு  செயல்படுத்தும் நலத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மக்களிடையே காணொலியில் உரையாடினார்.


அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வீடில்லாதவர்களுக்கு இலவச வீடு, சிறு வியாபாரிகள் தொழில் செய்ய வட்டியில்லா கடனுதவி, பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள், இலவச உணவு தானியம் வழங்கல், மருத்துவ சிகிச்சை ஆகிய திட்டங்கள் குறித்தும், விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம், குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும் மக்கள் மருந்தகங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.


நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சிகொல்லி மருந்து தெளிக்கும் செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினரும், பாண்டிச்சேரி பாஜக தலைவருமான எஸ்.செல்வகணபதி, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வியாபாரிகளுக்கு கடனுதவி, பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், விவசாயிகளுக்கு வேளாண் கருவி உள்ளிட்ட நலத் திட்டங்களை வழங்கினர்.


நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலர் கார்த்தியாயினி, மாநிலச் செயலர் கொ.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் மனோகரன், நிர்வாகிகள் பி.லோகேஷ்குமார், கே.ஜி.சுரேஷ், சுதாபிரியா, வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், மேல்முட்டுகூர் ஊராட்சித் தலைவர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad