வேலூர் மாவட்டத்தையே அதிர வைத்திருக்கிறார் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பன்னீர்செல்வம்.. யார் இவர், இவர் மீது நேரடியாக அமலாக்கத்துறையே ஆக்சன் எடுப்பது ஏன் என்பதை பார்க்கும் முன்பு கடந்த 2020ம் ஆண்டு நடந்த சம்பவத்தை பார்ப்போம்.
வேலூர் மாவட்டம், அதாவது வேலூர் மண்டலம் என்பது வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் வரை வரும். வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் மிகவும் பிரபலம். இங்கு 100க்கணக்கான தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலைகளால் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், கழிவுநீர் வெளியேறும் விஷயம் தான் சிக்கலாக உள்ளது.
இந்த தோல் தொழிற்சாலைகள், கழிவுநீர், கெமிக்கல் நீரை பாலாற்றில் விடுவதும் அடிக்கடி நடக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதையடுத்து ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு நகரங்களில் அரசின் உதவியோடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இதுவே நிரந்தர தீர்வை தரவில்லை. ஏனெனில் இந்த கழிவுநீர் நிலையத்துக்கு கம்பெனிகள் நீரை அனுப்பும்போது, எவ்வளவு நீரை அனுப்புகிறார்களோ அதற்கு உண்டான கட்டணத்தை அந்த தொழிற்சாலைகள் செலுத்த வேண்டும்.
இந்த கட்டணம் செலுத்தாமல் இருக்க பாதி நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பும் கம்பெனிகள், மீதி நீரை பாலாற்றில் இரவுகளில் திறந்துவிடும் சம்பவங்கள் நடந்து வந்தது. இப்படி இரவில் கழிவு நீரை பாலாற்றில் திறந்துவிடும் தொழிற்சாலைகளை குறிவைத்து மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயல்பட்டு, லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தது
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மைச் சுற்றுச்சூழல் பொறியாளராக வேலூர் மண்டல அலுவலகத்தில் பணியாற்றியவர் பன்னீர்செல்வம். இவர் தலைமையிலான வேலூர் மண்டலத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் இருந்தன. இந்த மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகளைப் புதியதாகக் கட்டுதல், புதுப்பித்தல் போன்றவற்றுக்கு இவரது துறையில் அனுமதி வேண்டும். அப்படி புதியதாக தொடங்க, புதுப்பிக்க வருபவர்களிடம், பன்னீர் செல்வம் வசூல் வேட்டை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்றது.
இதையடுத்து இவரை கடந்த 2020ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்ததுறை பொறிவைத்து பிடித்தது மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி அதிகாரி பன்னீர்செல்வம் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.3.59 கோடி பணம், 61 தங்க நாணயங்கள், 453 பவுன் தங்கநகைகள், 6½ கிலோ எடையுள்ள வெள்ளி பொருள்கள் ஆகியவை சிக்கின. வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் பன்னீர்செல்வம் லஞ்சம் பணம் மூலம் ரூ.7.54 கோடிக்கு சொத்துகளை வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரைத்தனர். அதனடிப்படையில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான ரூ.1.12 கோடி மதிப்புள்ள 6 அசையா சொத்துகள், ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றிய ரூ.3.59 கோடி என ரூ.4.71 கோடி சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் ஏற்கனவே சிக்கிய 61 தங்க நாணயங்கள், 453 பவுன் தங்கநகைகள், 6½ கிலோ வெள்ளி பொருட்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளார்கள்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:
Post a Comment