வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக அதிக அளவில் காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் உத்தரவின் பேரில், குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில், பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் பேரணாம்பட்டு வி. கோட்டா சாலையில் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களை பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பேரணாம்பட்டு பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களது பெயர்களை விசாரிக்கையில் ரியாஸ் அஹமத் (வயது 26), அர்ஷத் (வயது 27), முபாரக்அலி (வயது 27) ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 14 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 5 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment