குருதிக்கொடையாளர் தினத்தினை முன்னிட்டு இன்று வேலூர் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அதிக முறை இரத்த தானம் செய்தவர்களுக்கு சிறந்த குருதிக்கொடையாளர் விருது வழங்கி வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தி.கலியமூர்த்தி பாராட்டினார்.
உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்தம் வழங்குநர் நாளாக கொண்டாடி வருகிறது.
2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.
காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் உலக இரத்த தானம் செய்தோர் தினத்தினை முன்னிட்டு இரத்த தானம் செய்த இரத்த கொடையாளர்களுக்கு சிறந்த இரத்த தானம் செய்தோர் விருது வழங்கி கௌரவிக்கிறது.
இதற்கான விழா வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 14.06.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணியளவில் நடைபெற்றது.
விழாவிற்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்று பேசினார்.
அவைத்துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், மருத்துவ குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து, மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
இருபத்தி ஐந்து முறை இரத்த தானம் செய்த வழக்கறிஞர் கே.சங்கர், 20முறை இரத்த தானம் செய்த டி.நேத்தாஜி, 12 முறை இரத்த தானம் செய்த ஜி.கனிமொழி, மற்றும் எ.அசோக்குமார், எஸ்.நவீன், எஸ்.நன்மாறன், பி.என்.இராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த இரத்த தானம் செய்தோர் விருதுகளை வழங்கி பொன்னாடை போர்த்தி வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தி.கலியமூர்த்தி பாராட்டினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment