காட்பாடி செப்.18-
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனமும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் வினோத்குமார். இவரது சொந்த ஊர் சிவகாசி ஆகும். இந்நிலையில் கடந்த 8ம் தேதி காட்பாடி கணியமுது திருமண மண்டபம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்க்கும்போது அங்கு நிறுத்தி இருந்த தனது இருசக்கர வாகனத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார் வினோத்குமார். இதைத் தொடர்ந்து பல இடங்களில் தேடிப் பார்த்தும் தனது இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு பின்னர் காட்பாடி காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி உத்தரவின் பேரில், காட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன் அறிவுறுத்தலின் பேரில், காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான, தனிப்பிரிவு போலீசார் சம்சுதீன், வினோத், ராஜேஷ், சந்துரு, தமிழ் ஆகியோர் இந்த தொலைந்து போன இருசக்கர வாகனத்தை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் காட்பாடி கிளித்தான் பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வைத்திருந்தது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியதில் அவர்கள் காட்பாடி அருப்புமேடு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (வயது 30) மற்றும் காட்பாடி ஏரிமுனை ஹவுஸிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரின் மகன் பிருத்திவிராஜ் (வயது 26 )என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரிடமிருந்தும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின் பேரில் இருவரும் வேலூர் தொரப்பாடி ஆண்கள் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment